×

தேனி, விருதுநகர், சிவகங்கை ராமநாதபுரத்தில் கனமழை: போடிமெட்டில் மண் சரிவு, 16 மணி நேரம் போக்குவரத்து துண்டிப்பு, வீடுகள் இடிந்து சேதம்; 2 பேர் பலி, ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கி நாசம்

மதுரை: தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையால் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. 2 பேர் பலியாயினர். ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கி நாசமடைந்தன. போடிமெட்டில் மண் சரிவால் 16 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டியது. இதில், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது. சாயல்குடி அருகே கொண்டுநல்லான்பட்டியில் 50க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தன.

சாயல்குடி அருகே வெள்ளம்பல் கிராமத்தை சேர்ந்த விவசாயி வேலுச்சாமியின் (70) ஓட்டு வீடு திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுடன் சிக்கி அவர் உயிரிழந்தார். மகள் பொன்னுத்தாய் (30) படுகாயமடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர் பகுதியில் 6 வீடுகள் சேதமடைந்தன. சிவகங்கை மாவட்டத்தில் 3 வீடுகள் சேதமடைந்தன. தொடர் மழையால் விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் புகுந்தது. ஓ.முத்துலாபுரம் கண்மாய் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததை தொடர்ந்து மீட்புக்குழுவினர் ஊருக்குள் சென்று வெள்ளத்தில் சிக்கிய 20 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.

திருச்சுழி, சிவகாசியில் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால், 17 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட போடிமெட்டு மலைச்சாலையில், 8, 9, 11 ஆகிய வளைவுகளில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மெகா சைஸ் பாறைகளும் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைச்சாலை முற்றிலுமாக அடைக்கப்பட்டதால், போடிமெட்டு மலை மற்றும் கேரள பகுதிகளிலும் முந்தல் மலை அடிவாரத்திலும் நீண்ட வரிசையில் தமிழக, கேரள பஸ்கள் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 16 மணி நேர சீரமைப்பு பணிகளை தொடர்ந்து, போக்குவரத்து தொடங்கியது.

வருசநாடு அருகே கீழபூசனூத்து, மயிலாடும்பாறை அருகே தெய்வேந்திரபுரம் கிராமத்தில் 3 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. உத்தமபாளையம் பகுதியில் 200 ஏக்கர் நெல் பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழையால் நட்சத்திர ஏரி தனது முழு கொள்ளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், கொடைக்கானல் பள்ளங்கி அடிசரை கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் பூம்பாறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் மூழ்கியது. இதனால் அப்பகுதி மக்கள் அத்தியாவ‌சிய‌ தேவைக‌ளுக்கு கூட‌ வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

கொடைக்கானல் மேல்மலை கிராமம் கூக்கால் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் வைகை அணைக்கான நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று காலை 6 மணிக்கு வினாடிக்கு 4,400 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 7 மணிக்கு 19,280 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* சதுரகிரி மலையில் சிக்கிய 200 பேர் பத்திரமாக மீட்பு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் காலௌ மலையேறிய 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கனமழையால் இரவு முழுவதும் மலைப்பாதையிலேயே தவித்தனர். காலையில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் 200 பக்தர்களும் மலைப்பாதைகளில் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு ஓடைகளில் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.

* தத்தளித்த கர்ப்பிணி,தந்தை, மகள் மீட்பு
தொடர் மழையால் விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே அன்பின்நகரம் – ஏழாயிரம்பண்ணை செல்லும் சாலையில் நேற்று தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த அபர்ணா (20) என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு தரைப்பாலத்தை கடந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மழை காரணமாக சாத்தூர் சத்திரப்பட்டி கிராமத்தில் சுப்புலட்சுமிக்கு என்ற மூதாட்டிக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் சுவர் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தது.

இரவு நேரம் மூதாட்டி பக்கத்து வீட்டில் தங்கியதால் உயிர் தப்பினார். வெம்பக்கோட்டை அருகே குகன்பாறையை சேர்ந்த வினோத் தனது மகள் அவந்திகா (3) உடன் நேற்று காரில் திருவேங்கடம் சென்றார். குகன்பாறை ஆற்றுப்பாலத்தில் செல்லும்போது திடீரென மழை வெள்ளத்தில் கார் அடித்துச் சொல்லப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சங்கர், தனிப்பிரிவு தலைமை காவலர் கொத்தாளமுத்து ஆகியோர் கிராம மக்கள் உதவியுடன் நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு தந்தை, மகள் இருவரையும் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

The post தேனி, விருதுநகர், சிவகங்கை ராமநாதபுரத்தில் கனமழை: போடிமெட்டில் மண் சரிவு, 16 மணி நேரம் போக்குவரத்து துண்டிப்பு, வீடுகள் இடிந்து சேதம்; 2 பேர் பலி, ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கி நாசம் appeared first on Dinakaran.

Tags : Theni, Virudhunagar, Sivagangai Ramanathapuram ,Podimet ,Madurai ,Theni, ,Virudhunagar ,Sivagangai ,Ramanathapuram ,Theni, Virudhunagar, ,Sivagangai Ramanathapuram ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...